×

காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில் மரணம்: அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

காரைக்கால்: காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று (3ம்தேதி) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த போலகம் கிராமம் வீரன்குடி தெருவை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய திபெத் எல்லைக் காவல்படையின் 47வது படை பிரிவில் காவலராக சேர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் வந்த பிரேம்குமார், மீண்டும் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் இந்தியா சீனா எல்லையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 30ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா, சீனா எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வீரர் பிரேம்குமார் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பிரேம்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து மரணம் அடைந்த வீரர் பிரேம்குமார் உடல் விமான மூலம் நேற்றுமுன்தினம் சென்னை கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நேற்று இரவு திருப்பட்டினம் பகுதியில் உள்ள பிரேம்குமார் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேம்குமாரின் உடல் இன்று (3ம்தேதி) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. வீரமரணம் அடைந்த பிரேம்குமாருக்கு திருமணமாகி செவ்வந்தி என்ற மனைவியும், 5 வயதில் கீர்த்தி என்ற ஆண் குழந்தையும், செவ்வந்தி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில் மரணம்: அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Kashmir ,Prem Kumar ,Veerankudi Street, Polakam Village, Tirupatnam, Karaikal District ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...